இந்தியா

சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைந்ததால் பரிகாரப் பூஜை ? நவீன தீண்டாமையா ?

கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் செப்டம்பர் 28 ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. இதனையடுத்து உடனடியாக அந்தத் தீர்ப்பை அமல்படுத்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் மாதாந்திர பூஜைக்காக ஐயப்பன் கோவிலின் நடை ஐப்பசி மாதம் திறக்கப்பட்டது. ரெஹானா பாத்திமா முதல் ஸ்வீட்டி மேரி வரை ஐயப்பன் கோவில் சன்னிதானம் செல்ல முயன்றனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தங்களது முயற்சியை கைவிட்டனர். மேலும் நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தடியடி சம்பவமும் நடைபெற்றது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலின் பல முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சபரிமலையின் முக்கிய நிகழ்வான மண்டலப் பூஜை மற்றும் மகர விளக்கு விழாவுக்காக கோவிலின் நடை கார்த்திகை மாதம் முதல் நாள் திறக்கப்பட்டது. அப்போது 50வயதிக்குட்பட்ட ஒரு சில பெண்கள் நுழைய முயன்றனர், ஆனால் போராட்டம் நடத்தப்பட்டதால் திரும்பிவந்தனர். பின்பு புனேவைச் சேர்ந்த பெண்ணிய செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் குழுவினரும் சன்னிதானம் செல்ல தீர்மானித்து முயன்று எதிர்ப்பு காரணமாக திரும்பினர். ஆனால், திடீரென சென்னையைச் சேர்ந்த மனிதி மகளிர் அமைப்பைச் சேர்ந்த 11 பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர்.  சபரிமலை செல்லும் மலைப் பாதையில் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக போலீஸார் அவர்களை திருப்பி அனுப்பினர்.

பின்பு, மண்டலப் பூஜை நிறைவடைந்து நவம்பர் 27 ஆம் தேதி சபரிமலை கோயில் நடை அடைக்கப்பட்டது. அதனையடுத்து மகர விளக்குப் பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இப்பூஜைக்காக கோயிலின் நடை ஜனவரி 19 ஆம் தேதி வரை மட்டுமே திறந்திருக்கும் என்பதால் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம் மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் படையெடுக்க தொடங்கினார்கள். இப்படியாக ஜனவரி 2 ஆம் தேதி காலை கேரள அரசு ஒரு வீடியோவை வெளியிட்டு, அதில் பிந்து மற்றும் கனக துர்கா எனும் 40 வயதுடைய பெண்கள் அதிகாலை சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தது.

இவ்விவகாரம் நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. கேரளாவில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்தது. இதனால் கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களும் பாதிக்கப்பட்டனர். தமிழக - கேரள எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பெரும் அவதியுற்றனர் பக்தர்கள். சன்னிதானத்தில் இரண்டு பெண்கள் நுழைந்ததால். சபரிமலை தந்திரி, பரிகார பூஜையை மேற்கொள்வதற்காக நடை அடைப்பு செய்தார். பின்பு, ஒரு மணி நேரம் கழித்துதான் கோயிலின் நடை திறக்கப்பட்டது. கோவில் நடையை திடீரென அடைத்ததற்கும். அதுவும் பெண்கள் நுழைந்ததால் அடைக்கப்பட்டதற்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன. 

இது குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் " சபரிமலை தந்திரியின் நடவடிக்கை வினோதமாக இருக்கிறது. தந்திரியும், தேவஸம் போர்டு ஆகியோரின் வாதங்களை கேட்ட பின்புதான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்க தந்திரிக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. ஆனால் நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றுவது அதனை மதிப்பது தந்திரியின் கடமை. அப்படி அவரால் முடியாதென்றால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும்" என காட்டமாக தெரிவித்தார். தேவஸம் போர்டும் கோயில் நடை பெண்கள் நுழைந்ததால் அடைக்கப்பட்டதற்கு 15 நாள்களுக்குள் பதிலளிக்க தந்திரிக்கு உத்தரவிட்டது.

மேலும் கேரளாவின் பொதுப் பணித்துறை அமைச்சர் ஜி.சுதாகரன் "பெண்கள் நுழைந்ததால் பரிகார பூஜை செய்த தந்திரி ஒன்றும் தூய்மையானவர் இல்லை. அவர் ஒரு கெட்ட புத்திக்காரர். அவருக்கு ஐயப்பன் மீது பக்தியெல்லாம் இல்லை. அவரின் மனம் முழுவதும் சாதியப் பாகுபாடுதான் உள்ளது" என்று தன் கண்டனங்களை தெரிவித்தார். மேலும் இந்தப் பரிகாரப் பூஜை குறித்து பல்வேறு பெண்ணிய அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இது உச்சநீதிமன்றத்தை அவமானப்படுத்தும் செயல், அரசியல் சாசனத்தை தந்திரி மதிக்கவில்லை என்றும் அதிருப்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, “கேரள அரசுதான் ஐயப்பன் நம்பிக்கையில் பெண்களை தலையிட அனுமதித்திருக்கிறது. கடவுள் நம்பிக்கையற்றவர்கள், நம்பிக்கையை குலைக்க உதவியிருக்கிறார்கள். சுத்திகரிப்பு பூஜை செய்த தந்திரி சரியான செயலையே செய்திருக்கிறார்” என்றார்.

பெண்கள் நுழைந்தால் பரிகாரப் பூஜையா ? அப்படியொரு தீண்டாமை உண்மையில் இருக்கிறதா ? பெண்கள் தீண்டத்தகாதவர்களா ? என்ற கேள்வியை ஒரு சிலரிடம் கேட்டோம். சென்னையில் உள்ள பிரசித்திப் பெற்ற ஐயப்பன் கோவிலின் மேல்சாந்தி ஒருவரிடம் கேட்டோம் அதற்கு அவர் " பெண்கள் தெய்வங்களுக்கு சமமானவர்கள். அவர்கள் நுழைந்ததற்காக தனியாக எந்தவொரு பரிகார பூஜையெல்லாம் இல்லை. இதே சபரிமலை சன்னிதான வளாகத்தில்தான் மாளிகைபுரத்தம்மன் சன்னதியும் இருக்கிறது. பொதுவாக பரிகாரப் பூஜை என்பது ஒரு சில கோயில்களுக்கென தனி விதிகள் சம்பிரதாயங்கள் இருக்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சடங்குகள் மீறப்படும்போது பரிகாரப்பூஜை நடத்தப்படும். அப்படிப்பட்ட ஆகம விதிகள் மீறப்பட்டதன் காரணமாகத்தான் கோயிலின் நடை சாத்தப்பட்டது. பெண்கள் நுழைந்ததற்காக நடை சாத்தபட்டதாக பார்க்கக் கூடாது"

இது குறித்து மேலும் தொடர்ந்த அவர் "சபரிமலை சன்னிதானத்தில் போலீஸார் பூட்ஸ் கால்களுடன் வந்தனர். அப்போதும் கோயிலின் நடை சாத்தப்பட்டு, பூஜை நடத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. அதேபோல சன்னிதானத்தில் பல முறை  கூட்ட நெரிசல் காரணமாக இரண்டு பக்தர்கள் மாரடைப்பால் மரணித்தனர். அப்போதும் கோயில் நடை அடைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டது. நாம் வாழும் தெருவில் ஒரு மரணம் நேர்ந்தால் கூட, அந்தத் தெருவில் இருக்கும் கோயில் சாத்தப்படும். இது வழக்கமான நடைமுறைதான். இதில் பெண்களை இழிவுப்படுத்தவில்லை. ஐயப்ப விரதத்தின் முக்கியமான விஷயமே பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்பதுதான் " என்றார் அவர்.

ஆனால் உச்சநீதிமன்றம் சபரிமலை விவகாரத்தில் அளித்த தீர்ப்பில் "எந்த விதத்திலாவது பரிசுத்தம் மற்றும் அசுத்தம் எனக்கூறி ஒதுக்குவது  பிரிவு 17-ன் கீழ் தீண்டாமையின் கீழ் வரும்” என தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.