இந்தியா

நாளை சபரிமலை நடை திறப்பு: மண்டல பூஜைக்காக முன்னேற்பாடுகள் தீவிரம்

நாளை சபரிமலை நடை திறப்பு: மண்டல பூஜைக்காக முன்னேற்பாடுகள் தீவிரம்

webteam

மகர விளக்கு, மண்டல பூஜைக்காக நாளை சபரிமலை திறக்கப்படும் நிலையில், பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜை விமரிசையாக நடைபெறும். இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கோயிலுக்கு வருவர். இந்த ஆண்டு மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோயிலில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் விரிவான ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் 24 மணி நேரத்துக்குள் பரிசோதனை செய்து கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றார். பக்தர்களின் வசதிக்காக, பம்பா மற்றும் நிலக்கல் பகுதியில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்படும் என்றும் அவர் கூறினார்.

இதுதவிர ஆன்டிஜன் எனப்படும் விரைவு பரிசோதனை வசதிகள் திருவல்லா, செங்கனூர், கோட்டயம் பகுதியில் மாநில சுகாதாரத்தறை சார்பில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என்றார். மேலும் கோயில் வளாகத்தில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே இந்த ஆண்டு சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.