இந்தியா

மண்டலப் பூஜை நிறைவு: சபரிமலை ஐயப்பன் கோயில் நடையடைப்பு

jagadeesh

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த மாதம் 16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வந்தனர். மண்டல பூஜை நேற்று நிறைவு பெற்றதையடுத்து, கோயில் நடை அடைக்கப்பட்டது. மண்டல பூஜை காலத்தில் 156 கோடியே 60 லட்சம் ரூபாய் வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டை விட சுமார் 51 கோடி ரூபாய் காணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. வரும் 30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை கண்டித்து கேரளா மாநிலம் முழுக்க பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதனால் பக்தர்கள் வருகை குறைந்து வருமானம் குறைந்ததாகவும் இந்த ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டதால் பிரச்னைகள் குறைந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருமானம் அதிகரித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.