இந்தியா

சபரிமலையில் மேளதாளம் முழங்க படிபூஜை... நிறைவடைந்த மகரஜோதி தரிசனம்!

webteam

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக் காலத்தின் பக்தர்கள் தரிசன நிறைவு நாள், பிரசித்தி பெற்ற படி பூஜை, மேள தாளம் முழங்க நடந்தது. திரளான பக்தர்கள் இதில் தரிசனம் செய்தனர்.

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலத்தின் பக்தர்கள் தரிசனம் நேற்று வியாழக்கிழமை (19.01.23) இரவோடு நிறைவடைந்தது. இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் முடித்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் முதலில் படி பூஜை நடத்த முடியவில்லை. இந்நிலையில் மகர ஜோதி தரிசனத்திற்குப் பின் பக்தர்களின் தரிசன எண்ணிக்கை சற்றே குறைந்தது.

இதையடுத்து, இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் முதல் படி பூஜை, கடந்த ஞாயிற்றுக்கிழமை மேளதாளம் முழங்க நடந்தது. இரண்டாம் நாளாக திங்கட்கிழமையும் படி பூஜை நடந்தது. தொடர்ந்து சபரிமலையில் மூன்றாவது முறையாக பக்தர்கள் தரிசன நிறைவு நாள், நேற்று (19.01.23) நடந்தது.

படி பூஜைக்காக சபரிமலை 18ம் படி, வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு படியிலும் கற்பூர தீபம் ஏற்றப்பட்டது. பூஜையில் பங்கேற்போருக்கு சகல ஐஸ்வர்யங்களும், சர்வ பாக்கியங்களும், எல்லாம் வல்ல நலன்களும் கிடைத்து வாழ்க்கை வளம் பெறும்  என்பது ஐதீகம்.

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி அடங்கிய குழுவினர் பக்தர்கள் தரிசன நிறைவு நாள் படி பூஜையை நடத்தினர். படிபூஜைக்காக கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்த  திரளான பக்தர்கள் படி பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஒருவருக்கு 1,37,900 ரூபாய் கட்டணமுள்ள இந்த படி  பூஜை, சபரிமலை பூஜைகளிலேயே அதிக கட்டணமுள்ள பூஜையாக உள்ளது. படி பூஜையின் முன்பதிவு வரும் 2037ம் ஆண்டு வரை முடிந்துள்ளது.

அதன்படி பூஜைக்காக இன்று முன்பதிவு செய்யும் ஐயப்ப பக்தர் இனி 14 ஆண்டுகள் கழித்தே படி பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்ய முடியும். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலத்தில் பக்தர்கள் தரிசனம் நேற்று இரவோடு நிறைவடைந்ததும், ஹரிவராசனம் பாடி நேற்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.



தொடர்ந்து இன்று (20.01.23) காலை 05.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகளுக்குப்பின் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனைக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டது. பின் காலை 06.00 மணிக்கு திருநடை அடைக்கப்பட்டு கோவில் சாவி பந்தள அரண்மனை வசம் ஒப்படைக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.