சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தகடுகள் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மேலும் சில விலை மதிப்புமிக்க பொருட்களும் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பல மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து செல்கின்றனர். இந்த நிலையில், அந்தக் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019இல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்டபின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது. இந்த விவகாரம், பக்தர்கள் மற்றும் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்த விவகாரம், நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காமலேயே அகற்றப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து தொடுக்கப்பட்ட வழக்கில் வெளிச்சத்துக்கு வந்தது. தங்கத்தின் எடை குறைந்ததில் உள்ள முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க, நீதிபதிகள் ராஜா விஜயராகவன்.வி மற்றும் கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, 2019இல் சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் மீதான தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளை தாமிரத் தகடுகளாக தவறாகப் பதிவு செய்ததாக, அப்போதைய நிர்வாக அதிகாரி பி.முராரி பாபுவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு இடைநீக்கம் செய்துள்ளது.
மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகராகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் மற்றும் தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு, திருவிதாங்கூர் தேவசம் வாரிய செயலர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ். பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவசம் போர்டு அதிகாரிகளே இந்த கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது. இதை எடுத்து 9 அதிகாரிகள் மீதும் கைது நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சபரிமலை மூத்த தந்திரி கண்டரரு ராஜீவருவை சேர்க்க கூட்டுச் சதி நடந்ததும் தெரிய வந்துள்ளது. சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தகடுகள் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மேலும் சில விலை மதிப்புமிக்க பொருட்களும் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.கோயில் நடை அடைக்கும் முன் ஹரிவராசனம் பாடும்போது ஐயப்பன் இடக்கையில் வைக்கப்படும் யோகதண்டா என்ற சிறு தடியும் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும், ஒருமுக ருத்திராட்ச மாலையும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. தங்க முலாம் பூசுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட யோக தண்டாவும் ருத்திராட்ச மாலையும் திரும்ப வரவில்லை என்றும் அதற்கு பதில் புதிய யோக தண்டா, ருத்திராட்ச மாலை வைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பழைய யோகதண்டா, ருத்திராட்ச மாலை குறித்து கோயில் பதிவேட்டில் எந்த விவரமும் இல்லை என்றும் புதியவை குறித்து மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐயப்பனின் பாரம்பரியம் மிக்க அணிகலன்கள் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 4 கிலோ தங்கத்தகடு மாயமானது குறித்த திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் சிறப்பு புலனாய்வுக் குழுவும் ஓய்வு பெற்ற நீதிபதி சங்கரன் குழுவும் விசாரித்து வருகின்றன.