செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
பிரசித்தி பெற்ற சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் கடந்த நவம்பர் 16ஆம் தேதி துவங்கியது. இதையடுத்து மண்டல பூஜை காலத்தின் முக்கிய நிகழ்வாக, திருவிதாங்கூர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 451 பவுன் தங்க அங்கியில் ஜொலிக்கும் சபரிமலை ஐயப்பனுக்கு கடந்த டிசம்பர் 25ம் தேதி மகா தீபாராதனை நடந்தது.
இதைத் தொடர்ந்து டிசம்பர் 26ம் தேதி மணியோசையும் சரணகோஷங்களும் முழங்க ஐயப்பனுக்கு பிரதான மண்டல பூஜை நடந்தது. தங்க அங்கியில் ஜொலித்த ஐயப்ப தரிசனத்திற்குப் பின் டிசம்பர் 26ம் தேதி இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்பட்டது. அதோடு நவம்பர் 16 முதலான 41 நாள் மண்டல பூஜைக்காலம் நிறைவுற்றது.
இந்நிலையில் மூன்று நாள் இடைவெளிக்குப் பின் டிசம்பர் 30ம் தேதியான இன்று மாலை 5 மணிக்கு சரண கோஷங்கள் முழங்க மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு , கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், சபரிமலை மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடைதிறந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றுகிறார். இதையடுத்து நடை திறந்தது முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.
இன்றிரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மீண்டும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். கேரள உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஆன்லைன் மூலம் தினசரி 70 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவான ஸ்பாட் புக்கிங் மூலம் தினசரி பத்தாயிரம் பக்தர்கள் என 80 ஆயிரம் பேருக்கு தரிசனம் அனுமதி வழங்கப்படுகிறது. 2025 ஜனவரி 14ம் தேதி மாலை, பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரணங்கள் அணிந்து, அரச கோலத்தில் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜை நடக்கிறது.
அதே நேரம் பொன்னம்பலமேட்டில் "மகர ஜோதி" தரிசனமும் நடக்கும். அப்போது வானில் மகர நட்சத்திரமும் தோன்றும். மகரஜோதி தரிசனத்திற்குப்பின், ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் அரச கோல ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். ஜனவரி 20ம் தேதி பந்தள மகாராஜா குடும்பத்தினருக்கு மட்டுமான சிறப்பு பூஜையும் தரிசனமும் நடத்தப்பட்டு அன்று இரவு கோயில் நடை அடைக்கப்படும். பின், சபரிமலை கோயிலின் சாவி, பந்தள மகாராஜா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அதோடு இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கால மகோற்சவம் நிறைவு பெறும்.