sabarimalai
sabarimalai pt desk
இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசன நேரம் அதிகரிப்பு – காரணம் என்ன?

webteam

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அன்று முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

sabarimalai

வழக்கமாக சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகளுக்குப் பின் மதியம் ஒரு மணிக்கு நடை மூடப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

இந்நிலையில், பக்தர்கள் வருகை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று (11.12.23) முதல், ஒரு மணி நேரம் முன்னதாக மாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.

பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, ஏற்கனவே நேற்று (10.12.23) முதல், 'வெர்ச்சுவல் கியூ' மூலம் தினசரி தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திங்கட்கிழமையான இன்றும் தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகாலையில் இருந்தே அதிகரித்து வருகிறது.

சபரிமலை பக்தர்கள்

பக்தர்கள் மரக் கூட்டம், சரங்கொத்தி துவங்கி சன்னிதானம் நடைப்பந்தல் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து படிப்படியாக தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பைத் தொடர்ந்து, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் பணிகள், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் கேரள அரசுத் துறைகள் சார்பில் முடுக்கி விடப்பட்டுள்ளது.