ரயில்
ரயில் ட்விட்டர்
இந்தியா

100 கிமீ வேகத்தில் 43 மைல்.. என்ஜின் டிரைவர் இல்லாமல் ஓடிய ரயில்.. விசாரணைக்கு உத்தரவு; வைரல் வீடியோ

Prakash J

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்ட ரயில் நிலையம் வரை டிரைவர் இல்லாமல் சரக்கு ரயில் ஓடிய விஷயம்தான் தற்போது பேசுபொருளாகி வருகிறது. அதாவது, சுமார் 1.5 மணி நேரம்... 70 கி.மீ தூரம் வரை இந்த ரயில் ஓடியதுதான் நாட்டையே பரபரப்பாக்கியது.

ரயில்வே தளவாடங்களைச் சுமந்துசெல்லும் சரக்கு ரயிலான இது, பஞ்சாப் நோக்கிச் செல்வதற்காக, பணியாளர்களை மாற்றுவதற்காக கதுவா ரயில் நிலையத்தில் 53 பெட்டிகளுடன், நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. ரயில் ஓட்டுநரும் அவரது உதவியாளரும் இறங்கிய பிறகு ரயில் தண்டவாளத்தில் ஒரு சரிவில் அது நகரத் தொடங்கியிருக்கிறது. ரயில் கிட்டத்தட்ட மணிக்கு 100 கிமீ வேகத்தில் ஓடியதாகவும், அப்போது ஐந்து நிலையங்களைக் கடந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு, இறுதியில் மரக்கட்டைகள் உதவியுடன் அந்த ரயில் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து மத்திய ரயில்வே துறை தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டது. 5 மூத்த ரயில்வே அதிகாரிகள் கொண்ட குழு விசாரணையில் இறங்கியது. முதல்கட்ட விசாரணையில், என்ஜின் டிரைவர் மற்றும் ரயில் நிலைய அதிகாரி ஆகியோர் பொறுப்பின்றி இருந்ததே தவறுக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த விபத்து தொடர்பாக 5 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.