தெலங்கானாவின் நிஸாமாபாத் நகரத்தில் பெய்த மழையின் அளவு குறித்து ஆர்.டி.ஐ (தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்) தகவல் கேட்ட பத்திரிகையாளர் அதிர்ச்சியில் உறைந்தார்.
தெலங்கானாவில் சமூக செயற்பாட்டாளராகவும், பத்திரிகையாளராகவும் இருப்பவர் ராஜேஷ் (27). இவர் மழைப் பொழிவு தொடர்பான ஆய்வுக்கட்டுரை ஒன்றை விவசாயத்திற்காகவும், விவசாயிகளுக்காகவும் மேற்கொண்டு வருகிறார். இதற்காக நிஸாமாபாத்தில் பெய்த மழைப்பொழிவின் அளவு என்ன என்பதை அறிந்துகொள்ள, அந்நகரத்தின் தலைமை திட்ட அதிகாரியிடம் தகவல் கேட்டுள்ளார். ஆனால் அவர் எந்த தகவலையும் வழங்கவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து ஆர்.டி.ஐ மூலம் மழைப்பொழிவின் அளவை அறிய விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பம் தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சித் திட்டப்பணி துறையிடம் சென்றுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள வளர்ச்சித் திட்டப்பணித்துறை, மழைப்பொழிவின் அளவை அறிந்துகொள்ள ரூ.20 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
அத்துடன் நிஸாமாபாத்தில் 41 தானியங்கி வானிலை மையம் இருப்பதாகவும், அவற்றிற்கு ரூ.3500 என்ற கணக்கில் மொத்தம் ரூ.17,22,000 வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஜி.எஸ்.டி வரி ரூ.3,09,960 செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே மொத்தம் ரூபாய் 20 லட்சத்து 30 ஆயிரத்து 960 வழங்க வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்ட பத்திரிகையாளர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.