இந்தியா

சபரிமலை விவகாரம்: தம்பதியினரை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது

சபரிமலை விவகாரம்: தம்பதியினரை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது

webteam

தடையை மீறி சபரிமலைக்கு செல்ல முயன்ற இந்து ஐக்கிய வேதி தலைவி சசிகலாவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் இளம் தம்பதியினர் 2 பேரை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை விழாவிற்காக நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 42 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜையில் பக்தர்கள் கலைந்து கொண்டு தரிசனம் பெறலாம். 

இதன் இடைப்பட்ட காலங்களில் இளம்பெண்கள் கோயிலுக்கு வரும்போது போராட்டம் நடத்துவதற்கு சிலர் கோயிலுக்குள் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

இதையடுத்து போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படாத நிலையில், நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டக்காரர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதைதொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இந்து ஐக்கிய வேதி தலைவி கே.பி.சசிகலா தடையை மீறி சபரிமலையில் இருமுடி கட்டிக்கொண்டு செல்ல முயன்றார். இதனால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசாருக்கும் அவருக்கும் வாக்குவாதம் முற்றவே அவர் கைது செய்யப்பட்டார். 

பின்னர், சனிக்கிழமை திருவல்லா துணை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள இந்து ஐக்கிய வேதி, மற்றும் பாஜகவினர் உட்பட போராட்டக்காரர்கள் பலரும் மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதித்துள்ளனர். 
 

இந்நிலையில், சசிகலாவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் இளம் தம்பதியினர் 2 பேரை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.லத்திகா மகன் ஜூலியஸும் அவரது மனைவி சானியாவும் காரில் சென்றுள்ளனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் காரை வழிமறித்து இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் சுதீஸுக்கு மூக்கில் ரத்தகாயம் ஏற்பட்டது. மேலும் சானியாவும் படுகாயமடைந்தார். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சுதீஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.