மோகன் பகவத்
மோகன் பகவத் pt web
இந்தியா

"சக மனிதரை 2000 வருடமா..பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடரணும்" ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Angeshwar G

சனாதனம் குறித்து தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜக அமைச்சர்களும் தலைவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மராத்தா சமூகத்தில் இருந்து பல அரசியல் தலைவர்களும் உருவாகி உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 16% இடஒதுக்கீடு வழங்கி மகாராஷ்ட்ர மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது எஸ்சிபிசி 2018 (Socially and Educationally Backward - SEBC) ஆம் ஆண்டு சட்டம் எனப்பட்டது.

மகராஷ்ட்ராவில் 52% இடஒதுக்கீடு அமலில் இருக்கும் சூழலில் மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டையும் சேர்த்தால் மொத்தமாக 68% இடஒதுக்கீடாக உயரும் என்றும் கூறப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அந்த சட்டத்தை செல்லாது என அறிவித்து தீர்ப்பளித்தது. அந்த சட்டம் அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 16ல் உள்ள சமத்துவத்திற்கு முரணானது என்றும் கூறியது.

இதனை அடுத்து இடஒதுக்கீடு வேண்டும் என அவ்வப்போது போராட்டம் ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர். தற்போது மீண்டும் இடஒதுக்கீட்டிற்கான வலியுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறுகையில், “சக மனிதர்களை சமூக அமைப்புகளில் நாம் பின் தங்கிய நிலையில் வைத்துள்ளோம். கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக இது தொடர்ந்துள்ளது. அவர்களுக்கு சமத்துவம் கிடைக்கும் வரை சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இடஒதுக்கீடு அதில் ஒன்று. பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடரவேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டிற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், குடும்ப அமைப்புகள் உலக அளவில் வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் பாரதம் அதிலிருந்து தப்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கலாச்சார வேர்களை பிடிங்கி எறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வேர்கள் உண்மை என்பதால் பாரதம் காக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.