இந்தியா

ஆர்.எஸ்.எஸ்.பள்ளியில் ’ராணுவப் பயிற்சி’

ஆர்.எஸ்.எஸ்.பள்ளியில் ’ராணுவப் பயிற்சி’

webteam

உத்தரபிரதேச மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ்.நடத்தும் பள்ளியில் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவரான ராஜூ பையா நினைவாக உத்தரபிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயிற்சி பள்ளியை தொடங்குகிறது. இதில் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் கல்வி பிரிவான வித்யா பாரதி இந்தப் பணிகளை கவனிக்கும். புலந்த்சாகர் மாவட்டம் ஷிகார்பூரில் தொடங்கப்பட இருக்கும் இந்த பயிற்சி பள்ளிக்கு ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர் என பெயர் சூட்டப்பட உள்ளது.‌ சிபிஎஸ்இ பாடத்திட்ட முறை இந்த பள்ளியில் கடைபிடிக்கப்படும். 

இந்தப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்புகள் வரையுமான மாணவர்கள் சேர்க்கப்படுவர். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும் என்றும் இந்தப் பள்ளியில், மாணவர்களுக்கு ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

8 ஏக்கர் பரப்பில் பள்ளி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னாள் ராணுவ வீரர் சவுத்ரி ராஜ்பால் சிங் இதற்கான நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளார். முதல் கட்டமாக 160 மாணவர்களுடன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. உண்டு உறைவிட பள்ளியாக இது செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே வித்யா பாரதி அமைப்பு, நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பள்ளிகளை நடத்தி வருகிறது. அரசு ராணுவ பள்ளிக ளை நடத்தி வரும் நிலையில் ஆர் எஸ் எஸ் அமைப்பு, ராணுவ பள்ளியை தொடங்க வேண்டியதன் அவசியம் என்ன என்று ‌சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.