இந்தியா

மஹாராஷ்டிரா வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்தான் காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மஹாராஷ்டிரா வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்தான் காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

webteam

மஹாராஷ்டிராவில் வன்முறைகள் வெடித்ததற்கு ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து இயக்கங்களே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. 

கோரேகாவ் போரின் 200வது ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி புனேயில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே நேற்று முன் தினம் திரளான தலித் மக்கள் திரண்டிருந்தனர். அதற்கு சில வலதுசாரி இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை விரட்டியடித்தனர். இதில், தலித் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். பலர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் மகாராஷ்டிரா முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வன்முறை பரவுவதை தடுக்க மஹாராஷ்டிரா முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாஹாராஷ்டிரா வன்முறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து இயக்கங்களே காரணம் என்றும், வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் காங்கிரஸின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மராத்தா இனத்தவருக்கும், தலித்துகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த இந்து இயக்கங்கள் முயற்சிப்பதாகவும் மக்களவையில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கார்கேவின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.