மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஹரிவன்ஷும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.கே. ஹரிபிரசாதும் போட்டியிடுகின்றனர்.
மாநிலங்களவைத் துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அந்தப் பதவிக்கு இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக தாங்கள் ஆதரவளிக்கும் வேட்பாளர் குறித்து மாநிலங்களவை செயலகத்தில் நோட்டீஸ் அளித்துள்ளன. இவை முறைப்படி இருப்பதாக செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்க்கட்சிகள் தரப்பில் தங்களுடைய வேட்பாளருக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரம் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ஹரிவன்ஷுகு போதிய ஆதரவு இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் விஜய் கோயல் கூறினார். ஹரிவன்ஷுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனாவும், அகாலிதளமும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதைத் தவிர கூட்டணியில் இல்லாத அதிமுக, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் பெரும்பான்மை இல்லாததால்தான் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினரை வேட்பாளராக பாரதிய ஜனதா அறிவித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.