இந்தியா

விஸ்வரூபம் எடுத்த தெருநாய் தொல்லை... அதிரடி சன்மானம் அறிவித்த கேரள அரசு

webteam

கேரளாவில் தெருநாய்கள் தொல்லை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவற்றைப் பிடித்து தருவோருக்கு 500 ரூபாய் வழங்கப்படுமென அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் தெருநாய் தாக்குதலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். காசர்கோடு மாவட்டம் பேக்கல் பகுதியில், தெருநாய்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்க, ஏர்கன் வகை துப்பாக்கியை ஏந்தியபடியே ஒருவர், பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். கண்ணூரில் தெரு நாய்களிடம் இருந்து மக்களை பாதுகாக்குமாறு, மரத்தில் ஏறி அமர்ந்து ஒருவர் தனிநபர் போராட்டம் நடத்தினார்.

இதனிடையே, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தெருநாய்களைப் பிடிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. நாய் பிடிப்பவர்களுக்கு ஒவ்வொரு நாயையும் பிடிப்பதற்கு ரூ.300 மற்றும் காப்பகத்திற்கு அழைத்துச் செல்ல ரூ.200 வழங்கவும் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில், தடுப்பூசி மற்றும் கருத்தடைக்காக தெரு நாயை விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையத்திற்கு கொண்டு வரும் விலங்கு பிரியர்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தெருநாய்களை பிடித்து கொடுத்தால் ரூ.500 வழங்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. பிடிக்கப்படும் தெருநாய்களை தங்கவைப்பதற்காக தற்காலிக தங்குமிடங்களை அமைக்க கட்டடங்களை கையகப்படுத்தவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், நாய்களைக் கொல்வது பிரச்னைக்குத் தீர்வாகாது என்றும், அறிவியல்பூர்வமான தீர்வு வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.