இந்தியா

ரூ.5 ஆயிரம் கோடி மோசடி - யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது குற்றப்பத்திரிகை

ஜா. ஜாக்சன் சிங்

ரூ.5,050 கோடி மோசடியில் ஈடுபட்டதாக யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை மையமாக வைத்து செயல்பட்ட யெஸ் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்ததாக 2020-ம் ஆண்டு புகார் எழுந்தது.

இதன்பேரில் அந்த வங்கியின் உரிமையாளர் ராணா கபூர் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது. இதில் மோசடி நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதால் ராணா கபூர், தேவான் வீட்டுக் கடன் நிறுவனத்தின் தலைவர்கள் தீரஜ் வதவான், கபில் வதவான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, தேவான் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,700 கோடிக்கு கடன் பத்திரங்களை வாங்கியது; அதற்கு கைமாறாக ரூ.600 கோடியை ராணா கபூர் நிர்வகிக்கும் மற்றொரு நிறுவனத்துக்கு தேவான் நிறுவனம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு பணப்பரிமாற்றங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இதுபோன்ற சட்டவிரதோ பணப்பரிவர்த்தனையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர், தேவான் வீட்டுக்கடன் நிறுவனத்தின் தலைவர்கள் தீரஜ் வதவான், கபில் வதவான் ஆகியோர் சேர்ந்து ரூ.5,050 கோடி மோசடியில் ஈடுபட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான குற்றப்பத்திரிகையையும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்தது.