வங்கியில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் சிக்கிய தனியார் நிறுவன உரிமையாளர்கள் நைஜீரியாவுக்கு தப்பி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் இயங்கி வருகிறது ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம். இந்நிறுவனத்தின் சார்பில் யுகோ, ஆந்திரா வங்கி, ஸ்டேங் பாங்க், அகலாபாத் உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்றுள்ளது. ஆனால், இந்தக் கடன்களை திருப்பி செலுத்தாமல் ஸ்டெர்லிங்க் பயோடெக் நிறுவனம் ஏமாற்றியுள்ளதாக வங்கிகள் தரப்பில் புகார்கள் எழுந்தனர். இதனையடுத்து, ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் வங்கிகளில் ரூ5 ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் நிதின் சந்தேசரா, திப்டி சந்தேசரா ஆகியோர் மீது அமலாக்கத்துறை, சிபிஐ குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்துள்ளது.
நிரவ் மோடி விவகாரத்தில் 10 ஆயிரம் கோடிக்கு மேல் வங்கி மோசடி நடந்ததாக விஸ்வரூபம் எடுத்தது. அந்த வரிசையில் தற்போது குஜராத்தை சேர்ந்த நிறுவனம் 5 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதிலும், நிதின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனிடையே, நிதின் ஐக்கிய அரசு எமிரேட்டில் அந்நாட்டு அதிகாரிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரி ஒருவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் ஐக்கிய அரபு எமிரேட் அதிகாரிகளால் துபாயில் நிதின் பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அது தவறான தகவல். அவர் துபாயில் பிடிக்கப்படவில்லை. நிதின் மற்றும் அவரது குடும்பத்தினர் நைஜீரியாவுக்கு புகார் எழும் முன்னரே தப்பிச் சென்றுவிட்டனர்” என்று கூறினார்.
இருப்பினும், துபாயில் நிதின் மற்றும் அவரது குடும்பத்தினர் துபாயில் தென்பட்டால் அவர்களை முறைப்படி கைது செய்ய ஐக்கிய அரசு எமிரேட் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்க மத்திய புலனாய்வு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. நிதின் சகோதர்களுக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸும் அளிக்கப்பட்டுள்ளது.
சந்தேசரஸ் சகோதரர்கள் நைஜீரியாவுக்கு இந்திய பாஸ்போர்ட் அல்லது வேறு நாடுகளின் ஆவணங்களை பயன்படுத்தி தப்பிச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. இந்தியாவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையே ஒப்படைப்பு ஒப்பந்தம் இதுவரை கையெழுத்தாகவில்லை. அதனால், நிதின் மற்றும் அவரது குடும்பத்தினரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.