இந்தியா

“கொள்ளையடிச்சவன புடிக்க துப்பில்ல”: கொதித்தெழுந்த டெல்லி வாசிகள்

“கொள்ளையடிச்சவன புடிக்க துப்பில்ல”: கொதித்தெழுந்த டெல்லி வாசிகள்

webteam


நேற்று மதியம் 12.30 மணிக்கு டெல்லி மெட்ரோ ரயிலில் அமர இடம் கிடைக்காமல் தரையில் ஆறு பேர் அமர்ந்துள்ளனர். தரையில் அமர்வது குற்றம் எனச் சொல்லி தலா இருநூறு ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் பாதுகாப்பு பொறுப்பை மேற்கொண்டுள்ள சிஎஸ்ஐஎஃப் படையினர்.

பணம் வைத்திருந்த இரண்டு பேர் அபராத தொகையைக் கட்டிவிட, மற்ற நான்கு பேரையும் கைது செய்ய அதிகாரிகள் முயன்றிருக்கின்றார்கள். இதை பார்த்ததும் சகப் பயணிகளுக்கு ஆவேசம் வந்து அரசாங்கத்தை கழுவிக் கழுவி ஊற்ற ஆரம்பிக்கிறார்கள்.

''பதினோறாயிரம் கோடி ரூபாயை அடிச்சவனை பிடிக்க துப்பில்லை. வெளிநாட்டுக்கு தப்பவிட்டு வேடிக்கை பார்க்குறீங்க..ரயில்ல டிக்கெட் வாங்கியும் இடம் கிடைக்காமல் தரையில உட்கார்ந்தவங்களை பெரிய தீவிரவாதி மாதிரி பிடிச்சிகிட்டு போறீங்களேடா... உங்களுக்கு வெக்கமே இல்லையா” என பேச மக்கள் ஆரம்பித்தனர்.  

அதோடு, இப்போதெல்லாம் திருடர்கள் வங்கிகளில் கொள்ளையடிக்க வங்கிகளே உதவி செய்கிறது. ஆனால் டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் மக்களை குறிவைப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது என கூறியுள்ளார் சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர் சூரஜ். இது மட்டுமல்லாமல் இதைவிட மோசமான கேள்வியையெல்லாம் கேட்டு மெட்ரோ ரயில் பயணிகள் பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.  

ஒரு குற்றத்திற்கும் மற்றவரின் இன்னொரு குற்றத்தை ஈடாக சுட்டிக்காட்டி நியாயப்படுத்துவது தவறுதான் என்றாலும், மக்களின் ஆதங்கம் சரியானதாகவே அமைந்திருக்கிறது. விஜய் மல்லையா தொடங்கி நிரவ் மோடி வரை பலரும் சட்டரீதியாக, வங்கிகளின் விதிகளில் உள்ள ஓட்டைகளைக் கொண்டு பணம் பெற்று, கடைசியில் வங்கிகளையே ஏமாற்றி உள்ளனர். இதனால் சமீப காலமாக வங்கிகளில், பல ஆயிரம் கோடிகளை சுலபமாக சுருட்டிக்கொண்டு ஓடும் தொழிலதிபர்கள் விவகாரம் பொது மக்கள் மத்தியில் மிகவும் ஆதங்கத்தை ஏற்படுத்திவருகின்றன.