தன்னிறைவு திட்டத்தின் கீழ் மீனவர்கள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கான புதிய திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னிறைவு திட்டத்தின் 2ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதில், கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் வழங்கப்படும் கடன் ரூ.2 லட்சம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் அறிவிக்கும்போது, மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்படுவதாகக் கூறினார். அத்துடன் 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கி ரூ.2 லட்சம் கோடி கூடுதல் கடன் தரப்படும் என அவர் அறிவித்தார். அறுவடை முடிந்து சாகுபடிக்கான தேவைகளுக்கும் விவசாயிகளுக்குக் கடனுதவி வழங்கப்படும் என்றார். மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க 6 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்கள் வகுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக,“அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் 100% அமல்படுத்தப்படும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குக் குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். முத்ரா திட்டத்தில் குறிப்பிட்ட காலத்தில் கடனை திருப்பி செலுத்துவோருக்கு 2% வட்டிச் சலுகை வழங்கப்படும். இதற்காக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்துள்ளார்.
அத்துடன் சாலையோர வியாபாரிகளுக்குச் சிறப்புக்கடன் வழங்குவதற்காக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். சிறப்புக்கடன் திட்டம் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயன்பெறுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மலிவு விலை வீடு திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படும் எனவும், இதற்காக ரூ.70 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என அறிவித்தார்.