nia relesed image
nia relesed image twitter
இந்தியா

”சனிக்கிழமை 2:48 மணிக்கு” - Email மூலம் மீண்டும் மிரட்டலா? தொடரும் பெங்களூரு குண்டுவெடிப்பு பதற்றம்!

Prakash J

பெங்களூரு ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு வைட் பீல்ட் அருகில் உள்ள, குந்தலஹாலி பகுதியில் இயங்கிவரும் பிரபல ’ராமேஸ்வரம் கபே’ உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இந்த விபத்தில் உணவகத்தில் பணிபுரிந்த 3 பேர், சாப்பிட வந்த பெண் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன், என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குண்டுவெடிப்பை நிகழ்த்திய நபர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும், தகவல் கொடுப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை, கர்நாடக அரசுக்கு மெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், உள்துறை அமைச்சர் மற்றும் பெங்களூரு நகர் காவல் ஆணையர் ஆகியோரின் பெயரிட்டு மிரட்டல் இமெயில் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கிடைத்த புகாரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இமெயிலில், ‘படத்தின் ட்ரெய்லர் எப்படி இருந்தது? நீங்கள் எங்களுக்கு 2.5 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.20,71,30,000) வழங்கவில்லை என்றால், கர்நாடகா முழுவதும் பேருந்துகள், ரயில்கள், கோயில்கள், ஹோட்டல்கள் மற்றும் பொது இடங்களில் நாங்கள் பெரிய குண்டுவெடிப்புகளை ஏற்படுத்துவோம். இன்னும் ஒரு ட்ரெய்லரை உங்களுக்குக் காட்ட விரும்புகிறோம். அடுத்த வெடிகுண்டை அம்பாரி உத்சவ் பேருந்தில் வெடிக்க வைக்கப் போகிறோம். அம்பாரி உத்சவ் பேருந்து குண்டுவெடிப்புக்குப் பிறகு, நாங்கள் எங்கள் கோரிக்கைகளை சமூக ஊடகங்களில் எழுப்புவோம். மேலும் உங்களுக்கு அனுப்பப்பட்ட மெயிலின் ஸ்கிரீன் ஷாட்களைப் பதிவேற்றுவோம். சமூக ஊடகங்களில், அடுத்த குண்டுவெடிப்பு பற்றிய தகவலை ட்வீட் செய்வோம்’ என்றும், ’தொழிநுட்ப நகரத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2:48 மணிக்கு வெடிக்கும்’ எனவும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சித்தராமையா

இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் சித்தராமையா, “எனக்கு அதுபோன்று எந்த மிரட்டல் அழைப்புகளும் வரவில்லை. ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் யாரை கைது செய்துள்ளனர் என்பது பற்றி எனக்குத் தெரியாது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை, கீழக்கரை உட்பட பல இடங்களில், என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.