டெல்லி கூட்ட நெரிசல் முகநூல்
இந்தியா

டெல்லி|ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் பலி.. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

டெல்லி கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

டெல்லி கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், பிராயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பிப்ரவரி 26 ஆம் தேதிவரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. சமீபத்தில் இந்நிகழ்வுக்கு சென்ற பலர், கூட்டநெரிசல் காரணமாக, மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். இதன் சோகம் மறைவதற்குள் அடுத்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

மகா கும்பமேளா

இந்தவகையில், மகா கும்பமேளாவுக்கு செல்ல டெல்லியில் இருந்து செல்லும் ரயிலை பிடிக்க ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்தில் குவிந்தனர். நடைமேடை 14 மற்றும் 15-இல் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்திருந்தனர். ரயில் வரும் என கூறப்பட்ட நடைமேடைக்கு பதில் வேறு நடைமேடையில் ரயில் வந்ததால் பயணிகள் முந்தியடித்து சென்ற போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நெரிசலில் சிக்கியதில், மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில்வே காவல் துறையுடன் காவல் துறை, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து பயணிகள் கூட்டத்தை சீர் செய்து, 4 சிறப்பு ரயில்கள் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டதாக ரயில்வே தெரித்துள்ளது. கும்பமேளா சென்ற பயணிகள் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

டெல்லி கூட்ட நெரிசல்- ரூ.10 லட்சம் நிதியுதவி

பலத்த காயம் அடைந்தர்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. டெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல் சம்பவம் குறித்து தங்கள் வேதனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வெளிப்படுத்தியுள்ளனர்.