இந்தியா

3 பெண்களை காப்பாற்றிய போலீஸ்காரர் ரயில் மோதி உயிரிழந்த பரிதாபம்

webteam

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 பெண்களின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே போலீஸ்காரர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹரியானாவைச் சேர்ந்தவர் ஜக்பிர் சிங் ரானா. வயது 51. ரயில்வே போலீஸ்காரரான இவர், டெல்லி அருகே உள்ள ஆசாத்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பணியில் இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.45 மணியளவில், இவர் பணியில் இருந்த போது, ரயில்வே தண்டவாளத்தை 3 பெண்கள் கடப்பதைப் பார்த்தார். அப்போது, கல்கா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது.

ரயில் வேகமாக வந்ததால், ரானா, அவர்களை நோக்கி கத்தினார். அக்கம் பக்கத்தில் நின்றிருந்தவர்களும் ஒதுங்கிச் செல்லு மாறு கத்தினர். ஆனால், அந்தப் பெண்கள் அதைக் கவனிக்காமல் ஜாலியாக பேசியபடியே தண்டவாளத்துக்குள் நடந்து சென்று கொண்டிருந்தனர். 

இன்னும் சிறிது நேரத்தில், அவர்கள் மீது ரயில் மோதும் என்பதை உணர்ந்த ரானா, வேகமாக ஓடினார். தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்தவர்களை வெளியே தள்ளி, அவர்கள் உயிரைக் காப்பாற்றினார். ஆனால், அதற்குள் சதாப்தி எக்ஸ்பிரஸ் வேகமாக வந்துவிட்டது. ரானா சுதாரிப்பதற்குள் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

இதை ரயில்வே பாதுகாப்புத்துறை இணை கமிஷனர் டி.கே.குப்தா, தெரிவித்தார். மூன்று உயிர்களை காப்பாற்றிவிட்டு ரயில்வே போலீஸ்காரர் ரானா தன் உயிரை இழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.