இந்தியா

பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்; எதிர்கட்சிகள் கொந்தளிப்பு-மக்களவை சபாநாயகர் விளக்கம்

சங்கீதா

நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சில வார்த்தைகள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், எதிர்கட்சிகள் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்துவதாகவும், இது வழக்கமான நாடாளுமன்ற அலுவல் பணி தான் எனவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 18-ம் தேதி முதல் துவங்குகிறது. இதனை முன்னிட்டு மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும்  பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய தொகுப்பை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 'பாலியல் துன்புறுத்தல்', 'வெட்கம்', 'துஷ்பிரயோகம்', 'துரோகம்', 'நாடகம்', 'பாசாங்குத்தனம்', 'திறமையற்றது', ‘கொரோனா பரப்புவர்’, ‘பொய்’, ‘சர்வாதிகாரி’, ‘ஊழல்’, ‘கோழை’, கண்துடைப்பு’, குழந்தைதனமானது, சர்வாதிகாரி, ‘கபடம்’ உள்ளிட்ட பல ஆங்கிலம் மற்றும் இந்தி வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாத  வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. மக்களவை செயலகத்தின் இந்த பட்டியலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 இதையடுத்து எதிர்கட்சிகள் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்துவதாகவும், இது வழக்கமான நாடாளுமன்ற அலுவல் பணி தான் எனவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இது 1959 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள விஷயம்தான் என்றும், மக்களவை மற்றும் மாநிலங்களவை அவைத் தலைவர்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும், நாடாளுமன்றத்தின் இயக்கப்பட வேண்டிய வார்த்தைகளை சேர்ப்பது அல்லது நீக்குவது வழக்கமான நடைமுறைதான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் மத்திய அரசை குறை கூறுவதற்காக உள்ள வார்த்தைகள் திட்டமிட்டு தடை செய்யப்பட்டிருப்பதாக எதிர்கட்சிகள் கூறுவது உண்மையல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இப்படி ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள், உறுப்பினர்கள் பேச்சில் இடம்பெற்றிருந்து அது நீக்கப்பட்டு இருந்தால், சம்மந்தப்பட்ட உறுப்பினர்கள், செயலாளரை சந்தித்து விளக்கங்களை பெறலாம் எனவும் ஓம் பிர்லா கூறியுள்ளார். மேலும் முன்பு நீக்கப்பட்ட வார்த்தைகள் புத்தகமாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது காகிதம் வீணாகமல் இருக்க இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.