இந்தியா

இந்தியக் கொடிக்கு பதிலாக பராகுவே கொடி: விமர்சனத்துக்குள்ளான ராபர்ட் வத்ரா

webteam

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா இந்திய கொடிக்குப் பதிலாக பராகுவே நாட்டு கொடியை ட்விட்டரில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற 6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில்  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா வாக்களித்தார். பின்னர் தாம் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டதாக செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். 

அதில் நமது உரிமையே நமது பலம். இந்திய நாட்டின் எதிர்காலத்தை தேர்வு செய்யுங்கள் என குறிப்பிட்டு மூவர்ணக் கொடியின் எமோஜியை பதிவிடுவதற்கு பதிலாக பராகுவே நாட்டு கொடியை தவறுதலாக பதிவிட்டார். இதை கவனித்த நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் ராபர்ட் வத்ராவை விமர்சிக்கத் தொடங்கினர்.

விமர்சனங்களுக்கு பதிலளித்து ட்வீட் செய்த ராபர்ட் வத்ரா, ''இந்தியா என் இதயத்தில் இருக்கிறது. எனது பதிவில் பாரகுவே நாட்டு கொடியை பயன்படுத்தியது கவனக்குறைவால் நடந்த தவறு. இது உங்கள் அனைவருக்கும் புரியும் என்பதும் எனக்கு தெரியும். ஆனாலும் இதை நீங்கள் இதை சர்சைசையாக்க முடிவு எடுத்துவிட்டீர்கள். இதனை நான் பொருட்படுத்தப்போவதில்லை'' என தெரிவித்துள்ளார்.