சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக சோனியாகாந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
சோனியா காந்தியின் மருமகனும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா கடந்த 2015-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பிகானெரில் 375 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலத்தை சட்டவிரோத பணபரிவர்த்தனைகள் மூலம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த நவம்பர் மாதம் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒருவார காலத்திற்குள் அதிகாரி முன் ஆஜராகி விளக்கமளிக்க அதில் கோரப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, ராபர்ட் வதேராவை கடுமையாக சாடியிருந்தார்.
அதாவது, பெரிய நிறுவனம் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான கோடி கடன் பெற்றுத் தந்ததில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த மருமகன் கமிஷன் பெற்றதாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா பற்றி மறைமுகமாக குறிப்பிட்டார். அந்த கமிஷனைக் கொண்டு பிகானெர் அருகே பல ஹெக்டேர் நிலத்தை அவர் குறைந்த விலைக்கு வாங்கியதாக ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டிருப்பதையும் அமித் ஷா சுட்டிக்காட்டினார்.