இந்தியா

ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

webteam

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, வெளிநாடு செல்ல, டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

ராபர்ட் வதேரா, லண்டனில் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி, ராபர்ட் வதேரா டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில், ராபர்ட் வதேரா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் வெளிநாடு செல்ல ஆறு வார காலத்துக்கு இன்று அனுமதி அளித்தது. இது தொடர்பாக, லுக் அவுட் நோட்டீஸ் ஏதும் அனுப்பப்பட்டிருந்தால் அது சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

அவர், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லலாம் என்றும் ஆனால், லண்டன் செல்ல அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.