திருட வந்த இடத்தில் சிசிடிவி ரெக்காடர் என நினைத்து செட்டாப் பாக்ஸை திருடர்கள் தூக்க சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
டெல்லியின் பெகும்பூர் பகுதியில் நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் கடந்த சனிக்கிழமை திருட்டு நடைபெற்றுள்ளது. இந்தத் திருட்டு குறித்து நகை கடையின் உரிமையாளர் டெல்லி காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த டெல்லி காவல்துறையினர் கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து துணை ஆணையர் எஸ்.டி.மிஸ்ரா, “நாங்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கடையில் திருட வந்த நபர்களின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. கடைக்குள் முதலில் இரண்டு பேர் வாடிக்கையாளர்கள் போல் வருகின்றனர். கடைக்குள் வந்தவுடன் நகைகளை பார்க்கின்றனர். இதனையடுத்து மேலும் இருவர் கடைக்குள் வந்தனர். இவர்கள் நான்கு பேரும் முகமூடி எதுவும் அணியாமல் கடைக்குள் வந்தனர்.
இதனையடுத்து இவர்கள் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து கடையின் உரிமையாளரை மிரட்டி நகைகளை கொள்ளை அடித்தனர். இவர்கள் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளையும் 1 லட்ச ரூபாய் பணத்தையும் கொள்ளை அடித்தனர். கொள்ளை அடித்த பின்பு சிசிடிவி கேமராவின் டிவிஆர் (ரெக்காடர்) எனக் கருதி இவர்கள் டிவியின் செட்டாப் பாக்ஸை திருடி சென்றனர். சிசிடிவியில் தாங்கள் திருடியதை மற்றவர்கள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக இவர்கள் இதனைத் செய்துள்ளனர்.
எனினும் இவர்கள் உண்மையான சிசிடிவி டிவிஆரை தூக்கி செல்லாததால் நாங்கள் அதனை வைத்து இவர்களை அடையாளம் கண்டுள்ளோம். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.