விவசாயிகள் வாழ்ந்து வந்த காவிரியில் இப்போது அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்தி வருவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மற்றும் கன்னட மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போராக நடந்து வருகிறது. வறட்சி காலத்தில் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் தண்ணீர் பிரச்னை வரத்தொடங்குகிறது. இந்த போராட்டத் தீயை மழையால் மட்டுமே அணைக்க முடிகிறது எனக் கூறியுள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ அப்போதே காவிரி கறைபடத் தொடங்கியது என சாடியுள்ளார். பல்வேறு நாடுகள் தண்ணீர் பிரச்னையை பேசி சுமூகமான தீர்வை நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆனால் ஒரு தேசத்தில் இருக்கும் நம்மால் முடியவில்லை. இதற்கு ஓட்டு அரசியல் இன்றி வேறு காரணங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்னை ஏதோ நீராதாரப் பிரச்னை மட்டுமல்ல, ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னை. இதில் அரசாங்கங்கள் கண்ணாமூச்சி ஆடுவது மக்களை ஏமாற்றும் செயல். காவிரியை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள். இப்போது அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். ஒரு நதிநீரைக் குடித்து விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வதும் முறையல்ல. தாய்ப்பாலும் நதிநீரும் வேறு வேறு அல்ல. நதியில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகும் என அதில் தெரிவித்துள்ளார்.