இந்தியா

ஜாம்நகரில் முன்னிலை வகிக்கும் ரவீந்திர ஜடேஜா மனைவி - குடும்ப அரசியலில் போட்டா போட்டி!

Sinekadhara

பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியான ரிவாபா போட்டியிடும் ஜாம்நகர் (வடக்கு தொகுதி) முக்கிய தொகுதி குஜராத் தேர்தலில் முக்கியத்தொகுதியாக பார்க்கப்படுகிறது.

2017 தேர்தலில் தர்மேந்திரசிங் ஜடேஜா 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் அஹிர் ஜீவன்பாய் கருபாயை தோற்கடித்தார். 2012 ஆம் ஆண்டு தேர்தலிலும் தர்மேந்திரசிங் ஜடேஜா வெற்றி பெற்றார். ஆனால் அது காங்கிரஸ் சார்பில். அப்போது தர்மேந்திர சிங், பாஜகவின் அயார் பெரா முலுபாய் ஹர்தாஸ்பாயை 9,448 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவருடைய இடத்தில் தற்போது ரிவாபா போட்டியிடுகிறார்.

பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி என்பதையும் தாண்டி, முதன்முதலில் தேர்தலில் போட்டியிடும் ரிவாபாவுக்கு அதீத கவனம் கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், குடும்பத்திற்குள்ளான அரசியல் பிரிவு. ஜடேஜாவின் தந்தையும், சகோதரியும் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், ரிவாபா அவர்களுக்கு நேர் எதிராக களத்தில் இறங்கி பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இருவேறு சித்தாந்தங்களை பின்பற்றுவது இது முதன்முறையல்ல. அவர் எனது மாமனாராக அல்ல; வேறு கட்சியின் உறுப்பினராக பேசுகிறார். அது அவருடைய தனிப்பட்ட உரிமை. நான் ஜாம்நகர் மக்களை நம்புகிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஜாம்நகர் தொகுதியில் ரிவாபா முன்னிலை வகித்து வருகிறார்.