திரிணாமுல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ரிதபிரதா பானர்ஜி மேற்கு வங்காள மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலில் பலத்த தோல்வியுற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளில் இருந்து விலகி வருகின்றனர். இதனால், திரிணாமுல் காங்கிரஸுக்குள் உட்கட்சிப் பூசல் நிலவுகிறது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ரிதபிரதா பானர்ஜி மேற்கு வங்காள மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
58 எம்எல்ஏக்கள் ஆதரவுக் கையெழுத்துடன் எதிர்க்கட்சித் தலைவராக உரிமை கோரிய ரிதபிரதா பானர்ஜியின் மனுவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவராக சோபன் தேவ் என்பவரை நியமிக்க வேண்டும் என்ற கட்சியின் தேசிய பொதுச்செயலரும் மம்தாவின் அரசியல் வாரிசாக பார்க்கப்படுபவருமான அபிஷேக் பானர்ஜியின் மனு சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது மம்தா தரப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனினும், மம்தா பானர்ஜியை தங்கள் தலைவராக பார்ப்பதாகவும் கட்சியை பிளக்கும் நோக்கம் இல்லை என்றும் ரிதபிரதா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகியுள்ள ரிதபிரதா பானர்ஜி, அம்மாநில அரசியலில் இடதுசாரி மாணவர் தலைவராக அறியப்பட்டவர்.1990களில் சிபிஎம் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐயின் பொதுச்செயலராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய ரிதபிரதா பானர்ஜி, முன்னாள் சிபிஎம் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரிக்கு நெருக்கமானவராக கருதப்பட்டார். 2014ஆம் ஆண்டு வெறும் 34 வயதில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். ஆனால் 2017ஆம் ஆண்டு கட்சித் தலைமையுடனான மோதல் மற்றும் சர்ச்சைகளுக்குப் பிறகு சிபிஎம்மில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் 2018ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸில் இணைந்த அவர், கட்சியின் தொழிற்சங்கப் பிரிவு தலைவராகவும், 2024ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் உயர்ந்தார். மம்தா பானர்ஜியின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர்களில் ஒருவராக உருவெடுத்த ரிதபிரதா பானர்ஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில் உலுபேரியா பூர்பா தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார். தற்போது திரிணாமுல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், மம்தா பானர்ஜிக்கு எதிராக அணி திரண்டுள்ள எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.