Risk of iPhone users' phones being hacked Reuters
இந்தியா

ஐபோன் பயன்படுத்துபவரா நீங்கள்: போன் ஹேக் செய்யப்படும் அபாயம்.. எச்சரிக்கை விடுத்த ஆய்வாளர்கள்!

ஐபோன் பயன்படுத்துபவர்களின் போன்கள் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Praveen Joshva L

ஆப்பிள் ஐபோனில் பழைய iOS பதிப்புகளை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் நடக்கின்றன. கிரிப்டோ வாலட் விவரங்கள் திருடப்படும் அபாயம் இருப்பதால், பயனர்கள் உடனடியாக iOS புதுப்பிப்புகளை செய்ய வேண்டும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய உலகில் பெரும்பாலானோரால் விரும்பப்படும் ஸ்மார்ட் போனாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனே உள்ளது. நீண்டகால மென்பொருள் ஆதரவு, கேமரா தரம், கட்டமைப்பு உறுதி மற்றும் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு வடிவமைப்பு ஆகியவையே ஆப்பிள் ஐபோனை பெரும்பாலானோர் விரும்ப முக்கிய காரணமாக உள்ளது.

ஆனால், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஐபோனிலேயே தனிப்பட்ட தரவுகளைத் திருடும் அபாயம் இருப்பதாக வெளியான தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் தொடக்கத்தில் சைபர் குழுக்கள் பழைய iOS பதிப்புகளைக் கொண்ட ஐபோன்களை இலக்கு வைத்து கிரிப்டோ வாலட் முகவரிகளை மாற்றுவது மற்றும் தரவுகளைத் திருட முயன்றது பாதுகாப்பு ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது.

குறிப்பாக iOS 18.6 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் சாதனங்களை இலக்கு வைத்து, இந்த இணைய தாக்குதல் நடந்ததாகவும், இதனால் பலரும் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதோடு iOS 27 பதிப்புகளைக் கொண்ட ஐபோன்களிலும் இந்த பாதுகாப்பு குறைபாடு சரிசெய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

பழைய iOS பதிப்புகளைப் பயன்படுத்தும் சாதனங்களை இலக்கு வைத்து, அதில் எஸ்.எம்.எஸ் மற்றும், பொதுத்தளங்களில் பகிரும் ஃபைல்களை டவுன்லோட் செய்வதால் சைபர் தாக்குதலில் ஈடுபடும் நபர்கள் ஐபோனில் நுழைந்து, பின்னர் கிரிப்டோ வாலட் முகவரிகளை மாற்றுவது, அதன் தகவல்களை பெறுவதன் மூலம் கிரிப்டோ கரன்சிகள் திருடப்படுகிறது என்றும், குறிப்பாக டெலிகிராம் மூலம் சைபர் தாக்குதல்கள் ஐபோனுக்கு வருவதாகவும் கூறப்பட்டது.

இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) ஐபோன் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை அனுப்பியுள்ளார். அதில் பழைய iOS பாதிப்புகளை கொண்ட ஐபோன்களில் சைபர் சைபர் தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாகப் புதுப்பிக்குமாறு வலியுறுத்தினார். அதேபோல, கிரிப்டோ துறையைச் சேர்ந்த பிரபல முதலீட்டாளரான சாங்பெங் ஜாவோ (Changpeng Zhao) என்பவரும் பழைய iOS பதிப்புகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் மூலம் கிரிப்டோ வாலட் விவரங்கள் ஆபத்திற்குள்ளாகக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது போன்ற எச்சரிக்கைகள் ஐபோன் பயனாளிகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.