இந்தியா

2050-ல் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்கள் மூழ்கும் அபாயம்..!

jagadeesh

கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 2050-ஆம் ஆண்டில் சென்னை‌, மும்பை உள்ளிட்ட ஏழு ந‌கரங்கள் மூழ்கடிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரி‌யவந்து‌ள்ளது. இதனால் 3‌ கோடியே‌ 60 லட்சம் இந்தியர்கள் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகின்றது.

அமெரி‌‌க்‌காவைச் சேர்ந்த கிளைமேட் சென்ட்ரல் என்ற நிறுவனம் இந்த அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறது. அந்நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட‌ ஆய்வின் முடிவில், பருவநிலை மாற்றத்தால் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் நாடுகளில், 75‌ சதவிகிதம் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவையாகும் எனத் ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ‌தன்படி இந்தியா, சீனா, வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் பங்க‌ளாதேஷ் ஆகிய ஆறு ஆ‌சிய நாடுகள் பேராபத்தை எதிர்நோக்கி இருப்பதாக எச்சரித்துள்ளது. வரும் 2050-ஆம்‌ ஆண்டுக்குள் கடல்மட்ட உயர்வால் உலக அள‌வில் நிலப்பகுதியில் வசிக்கும் சுமார் 30 கோடி பேர் வெள்ளத்தால் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் கிளைமேட் சென்ட்ரல் நிறுவனம் எச்சரித்துள்ளது. 2100-ல், நிலத்தில் வசிக்கும் மேலும் 20 கோடி பேர் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுவார்கள் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற‌து.


 ‌பருவநிலை மாற்றம் காரணமாக, இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஒடிசா, குஜராத்தின் கடலோர மாவட்டங்கள், கேரளாவின் கொச்சி உள்ளிட்ட இடங்களில் கடல் மட்டம் உயர்ந்து வருவதும் அந்நிறுவனத்தில் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் சென்னை மிகவும் அபாயகரமான பகு‌தியில் அமைந்திருப்பதாகவும் கிளைமேட் சென்ட்ரல் ஆராய்ச்சி நிறு‌‌வனம் தெரிவித்திருக்கிறது. கடல் மட்டம் உயர்வால் 3‌ கோடியே‌ 60 லட்சம் இந்தியர்கள் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகின்றது. இந்த எண்ணிக்கை CLIMATE CENTRAL ஆராய்ச்சி நிறுவனம் இதற்கு முன்னர்‌ மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கணிக்கப்பட்டதைவிட 7 மடங்கு அதிகமாகும்.‌

கார்பன் உமிழ்வைக் குறைக்க நடவடிக்கை எடுத்தால் கடல்மட்ட உயர்வைத் தடு‌த்து இந்த பேராபத்தை‌ ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.