குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை டெல்லியில் அதிகரித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் இது தெரிய வந்திருக்கிறது.
2016 ஆம் ஆண்டில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக டெல்லியில் சிறுவர்கள் மீது 2,499 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது முந்தைய ஆண்டில் 2,366 ஆக இருந்தது.
சிறுவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 56 கொலை வழக்குகள், 83 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. 155 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் 382 திருட்டு வழக்குகளும் பதிவாகின. கலவரத்தில் ஈடுபட்டதாக சிறுவர்கள் மீது 27 வழக்குகளும், வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக 286 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
சில்லறைக் குற்றங்களில் ஈடுபட்டதாக 497 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடிதடி மற்றும் கொள்ளைக் குற்றங்களுக்காக தலா 178 வழக்குகளும், வழிப்பறி செய்ததாக 10 வழக்குகளும் பதியப்பட்டன. மற்ற குற்றங்களில் ஈடுபட்டதாக 771 வழக்குகள் சிறுவர்கள் மீது பதியப்பட்டன.
நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைவான குற்றவாளியின் நடவடிக்கைகள் கொடூரமாக இருந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.