இந்தியா

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டி - தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ரிஷி சுனக்

ஜா. ஜாக்சன் சிங்

பிரிட்டன் பிரதமர் பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்களில் இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனக்குக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பிலும் அதிக வாக்குகளை பெற்று ரிஷி சுனக் முன்னிலை வகித்தார்.

பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் அண்மையில் பதவி விலகியதை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் நடைபெற்று வருகிறது.

இதற்காக அடுத்தடுத்து வாக்கெடுப்புகள் நடத்தப்படும். இதில் இறுதியாக கட்சி எம்.பி.க்களால் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களில் யாருக்கு கட்சி உறுப்பினர்களிடம் அதிக ஆதரவு இருக்கிறதோ, அவரே பிரதமர் பதவியில் அமர முடியும். ஒவ்வொரு முறை நடத்தப்படும் வாக்கெடுப்பில் குறைவான ஆதரவை பெறும் வேட்பாளர்கள், போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

அதன்படி, இதுவரை நடைபெற்ற வாக்கெடுப்புகளில் இந்திய வம்சாவளி எம்.பி.யும். முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ரிஷி சுனக்குக்கு மொத்தமுள்ள 358 கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களில் 115 பேர் ஆதரவளித்தனர். அவருக்கு அடுத்தப்படியாக வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கும் பென்னி மோர்டன்ட்டுக்கு 82 வாக்குகள் கிடைத்தன. வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு 71 வாக்குகளும், முன்னாள் அமைச்சர் கெமி படேனோச்சுக்கு 58 வாக்குகளும், எம்.பி. டாம் டுகென்தாட்டுக்கு 31 வாக்குகளும் கிடைத்தன. இதில், குறைவான வாக்குகளை பெற்ற டாம் டுகென்தாட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனால் தற்போது பிரிட்டன் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் 4-ஆக குறைந்துள்ளனர். இதுவரை நடைபெற்ற அனைத்து வாக்கெடுப்புகளிலும் ரிஷி சுனக்கே முன்னிலை வகித்து வருகிறார். இன்றும் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் ஒருவர் வெளியேற்றப்பட்டு 3 பேர் தேர்ந்தெடுப்படுவர். அதற்கு அடுத்த வாக்கெடுப்பில் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களில் ஒருவரை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நாடு முழுவதும் உள்ள 4,400-க்கும் மேற்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடம் இதுதொடர்பான கருத்துக்கணிப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரிஷி சுனக்குக்கு கிட்டத்தட்ட சரிபாதி பேர், அதாவது 48 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. அவ்வாறு நடந்தால், பிரிட்டன் பிரதமர் பதவியில் அமரும் முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமை ரிஷி சுனக்குக்கு கிடைக்கும்.