இந்தியா

சிபிஐ இயக்குநராக ரிஷி குமார் சுக்லா நியமனம்

rajakannan

சிபிஐ புதிய இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி ரிஷி குமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதனால் மத்திய அரசு, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதையடுத்து அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் பதவி ஏற்றார்.

பின்னர் அவரை தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட ராகேஷ் அஸ்தானாவையும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கியது. தற்போது சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்த்தும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் புதிய சிபிஐ இயக்குநரை தேர்வு செய்வது தொடர்பாக பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற இரண்டு கூட்டங்களும் தோல்வியில் முடிந்தன. 

இந்நிலையில், சிபிஐ புதிய இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி ரிஷி குமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், மத்திய பிரதேச மாநில டிஜிபியாக பணியாற்றியுள்ளார். ரிஷி குமார் சுக்லா நியமனத்தை அடுத்து, சிபிஐ இடைக்கால இயக்குநர் பொறுப்பில் இருந்து நாகேஸ்வர ராவ் விடுவிக்கப்பட்டுள்ளார்.