இந்தியா

தானாகவே ஆம்புலன்சை அழைத்தாரா? ரத்த வெள்ளத்திலிருந்த ரிஷப்பிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதா?

Rishan Vengai

ரிஷப் பண்ட்டிற்கு ஏற்பட்ட கொடூரமான விபத்தை பார்த்த சுற்றி இருந்தவர்கள் அவருக்கு உதவாமல் பேக்கையும் அதிலிருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிய சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி கூறியுள்ளார் ரிஷப் பண்டிற்க்கு உதவிய ஓட்டுநர் ஒருவர்.

இன்று அதிகாலை 5.15 மணி அளவில் டெல்லியிலிருந்து, உத்தரகண்ட்டின் ஹரித்வார் மாவட்டத்திலுள்ள தன் வீட்டுக்கு காரில் ரிஷப் பண்ட் சென்று கொண்டிருந்த போது, ஹம்மத்பூர் ஜால் என்ற பகுதியிலுள்ள எல்லைப்பகுதியில் அவர் கார் விபத்துக்கொள்ளாகியுள்ளது. அங்கிருந்து டிவைடரில் கார் மோதிய நிலையில், தீப்பற்றி எரியத்தொடங்கியுள்ளது. அப்போது கார் கண்ணாடியை உடைத்துகொண்டு ரிஷப் பண்ட் வெளியில் வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்தவர்களால் ரிஷப் பண்ட் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அருகிலிருந்த மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டபின் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட்டுக்கு கை, கால், முதுகு, தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மருத்துவர்கள், லேசான காயங்கள்தான் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் அபாய கட்டத்தை அவர் தாண்டி விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கிரிக்கெட் பிரபலங்கள், சக வீரர்கள், ரசிகர்கள் என அவர் விரைவில் குணமடைந்து மீண்டுவர வேண்டும் என சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விபத்து நடந்த இடத்தில் நடந்த ஒரு மோசமான சம்பவம் குறித்த தகவல் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் விபத்துக்குள்ளான காரில் இருந்து படுகாயங்களுடன் வெளியே வந்த ரிஷப் பண்டிற்கு உதவி செய்யாமல், சுற்றி இருந்தவர்கள் அவருடைய பேக்கையும், அதிலிருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடியதாகவும், பின்னர் தனக்கு தானே ஆம்புலன்சிற்கு போன் செய்து அழைத்ததாகவும், பின்னர் உதவுவதற்காக ஓடி வந்தவர்கள் அவர்களுடைய ஆடையை கொடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்த டிரைவர் ஒருவர் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து கூறியுள்ளார். விபத்துக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள உள்ளூர் மக்களால் பண்டின் உடமைகள், பணம் திருடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், விபத்தில் நேரில் பார்த்த சாட்சி இந்த கூற்றுக்களை மறுத்து, சாலையில் கிடந்த அனைத்து பணத்தையும் இந்திய கிரிக்கெட் வீரரிடம் தனிப்பட்ட முறையில் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் பேசியிருக்கும் ஓட்டுநர் சுசீல் என்பவர், "நான் ஹரியானா ரோட்வேஸ், பானிபட் டிப்போவில் டிரைவராக இருக்கிறேன். எங்கள் பேருந்து ஹரித்வாரில் இருந்து அதிகாலை 4:25 மணிக்கு புறப்பட்டது. நான் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு கார் அதிவேகமாக ஓட்டப்பட்டு வந்து, கண்ட்ரோல் இழந்து அருகிலிருந்த டிவைடரில் மோதியது. மோசமான மோதலுக்கு பிறகு, கார் சாலையின் தவறான பக்கத்தில் - டெல்லி செல்லும் சாலையில் தரையிறங்கியது. காரில் ஏற்கனவே தீப்பொறி பிடித்திருந்ததால் நானும் நடத்துனரும் விரைந்து சென்று அவரை காரிலிருந்து இறக்கினோம். அதற்குள் தீ கொழுந்துவிட்டு எரிந்தது” என்று சுசீல் கூறினார்.

மேலும், ”நாங்கள் உதவிக்காக அழ ஆரம்பித்தோம். ஆனால், யாரும் வரவில்லை. தேசிய நெடுஞ்சாலைக்கு போன் செய்தேன், யாரும் பதில் சொல்லவில்லை. பின்னர் நான் காவல்துறைக்கு போன் செய்தேன், நடத்துனர் ஆம்புலன்சை அழைத்தார். அவர் நலமாக இருக்கிறாரா என்று அவரிடம் தொடர்ந்து கேட்டோம். அவருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்தோம். நான் கிரிக்கெட்டைப் பின்தொடர்வதில்லை, அதனால் அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எனது நடத்துனர் என்னிடம் 'சுஷில்... அவர் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர்' என்று கூறினார். பின்னர் உதவிக்காக மூன்று பேர் ஓடிவந்தனர்.

மேலும் அவர்கள் பண்டைச் சந்தித்தபோது, அவர் ஆடை எதுவும் அணியவில்லை என்றும், அவரது முகம் முழுவதுமாக இரத்தத்தில் மூழ்கியிருந்தது என்றும் சுசீல் மேலும் தெரித்துள்ளார். மற்றும் "அவர் அம்மாவின் நம்பரைக் கொடுத்தார். நாங்கள் அவரை அழைத்தோம், ஆனால் அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. 15 நிமிடங்களுக்குப் பிறகு ஆம்புலன்ஸ் வந்தது, நாங்கள் அவரை அதில் ஏற்றினோம், காரில் தனியாக இருக்கிறாரா என்று நான் அவரிடம் கேட்டேன், அவர் வேறுயாரும் இல்லை என்று கூறினார். அவரது முகம் ரத்த வெள்ளத்தில் கிடந்தது மற்றும் அவரது உடைகள் கிழிந்து, முதுகில் கீறப்பட்டு இருந்தது. அவர் அதிர்ச்சியில் காயங்களுடன் நொண்டிக்கொண்டிருந்தார் " என்று ஓட்டுநர் சுசீல் கூறியுள்ளார்.