செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலம் தாவணகெரே, சென்னகிரியின் ஹொன்னபாவி கிராமத்தில் வசிக்கும் அதீப் உல்லா, மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் சதாம், சாலையோர ஹோட்டல் நடத்துகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சதாமின் குழந்தைகள், அதீப் உல்லாவின் கடைக்குச் சென்று 20 ரூபாய் கொடுத்து இரண்டு குர்குரே சிப்ஸ் பாக்கெட்களை வாங்கியுள்ளனர். ஆனால், அவை காலாவதியாகி இருந்ததால் சதாம், வேறு பாக்கெட் தரும்படி கேட்டுள்ளார்.
இதற்கு அதீப் உல்லா மறுத்ததால், இரண்டு குடும்பத்தினர் இடையே, வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதையடுத்து கிராமத்தினர் சமாதானம் செய்த நிலையில், அதீப் உல்லா மீது சென்னகிரி காவல் நிலையத்தில், சதாம் புகார் அளித்தார். இதனால் கோபமடைந்த அதீப் உல்லா, 30க்கும் மேற்பட்டோருடன் சதாமின் ஹோட்டலுக்குச் சென்று, அவரை தாக்கியதோடு ஹோட்டலையும் அடித்து சூறையாடியுள்ளார்.
அப்போது சண்டையை தடுக்க வந்தவர்களையும் தாக்கியதால், கலவரமாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 10 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சூழ்நிலையை சரி செய்தனர். கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கைது பயத்தால் 25 பேர் கிராமத்தை விட்டு ஓட்டம் பிடித்து விட்டனர்.