இந்தியா

ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட காண்டாமிருகம்

jagadeesh

அஸாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் ஏகே 47 ரகத் துப்பாக்கியால் சுடப்பட்டு வேட்டையாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரானோ வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற காசிரங்கா தேசியப் பூங்காவில் காண்டாமிருகம் ஒன்று வேட்டையாடப்பட்ட சம்பவம் விலங்கியல் ஆர்வலர்களைச் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

2019 ஆம் கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் 5 வகையிலான 27,300 காண்டா மிருகங்கள் இருக்கின்றன. இதில் 2018 கணக்கெடுப்பின்படி ஆப்ரிக்காவில் மட்டும் 900 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 3500 காண்டா மிருகங்கள் இருக்கின்றன. அவற்றில் 2400 காண்டாமிருகங்கள் மட்டும் காசிரங்கா தேசியப் பூங்காவில் வாழ்ந்து வருகின்றன.

காசிரங்காவில் இருக்கும் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் 12 அடி நீளமும், 2500 கிலோ எடைக்கொண்டாதாக இருக்கும். காண்டாமிருகத்தின் கொம்பு மருத்துவ குணம் வாய்ந்ததாகக் கருதப்படுவதால் அவை தொடர்ந்து வேட்டைக்காரர்களால் குறிவைத்துக் கொல்லப்படுகின்றன. அஸாமில் இவற்றைப் பாதுகாப்பதற்காக ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு ஏப்ரல் 1, 2019 இல் தொடங்கப்பட்டது. சுமார் 82 பேர் ஆயுதம் தாங்கியபடி காசிரங்கா தேசியப் பூங்காவைப் பாதுகாத்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக எவ்வித வேட்டைச் சம்பவமும் நடைபெறவில்லை.

இந்நிலையில் காசிரங்கா தேசியப் பூங்காவில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் வேட்டைக்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது. மேலும், அதன் ஒற்றைக் கொம்பை அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர் வேட்டைக்காரர்கள். காண்டாமிருகம் உடம்பிலிருந்து ஏகே 47 ரகத் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டா எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அஸாம் மாநில வனத்துறையினர் வேட்டைக்காரர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.