இந்தியா

கங்கையில் குப்பை போடுபவர்களை புகைப்படம் எடுத்தால் பரிசு

கங்கையில் குப்பை போடுபவர்களை புகைப்படம் எடுத்தால் பரிசு

webteam

கங்கை நதியில் குப்பை போடுபவர்களை புகைப்படம் எடுத்து அனுப்புபவர்களுக்கு 500 ரூபாய் பரிசு வழங்கப்படும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாயும் கங்கை நதி இந்தியாவின் புனித நதியாக கருதப்படுகிறது. இந்த நதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் குப்பைகளை போடுவதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கங்கை விளிம்பிலிருந்து நதியின் 500 மீட்டர் வரை கழிவுகள் கொட்டுவதை அனுமதிக்கக் கூடாது என்றும், ஆற்றில் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் பரிந்துரைத்தது.

இந்நிலையில், கங்கை நதியை துாய்மையாக்கும் திட்டத்தின் கீழ், நகர நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கங்கை நதியில் குப்பை போடுவோர் மீது வழக்கு பதிவு செய்து, சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நதி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் குப்பை போடுபவர்களை புகைப்படம் எடுத்து, அனுப்புவோருக்கு, 500 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.