“அப்பாவி மக்கள் சிந்திய ரத்தத்திற்கு பழிவாங்கப்படும். அது விரைவாகவோ அல்லது தாமதமாகவோ நடக்கும். ஆனால் அதை செய்வது உறுதி. அப்படி நாங்கள் செய்யும் போது மக்கள் எங்களை புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது நாகாலாந்தின் தேசிய சோஷியலிச பிரிவினைவாத அமைப்பு.
நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கூலித் தொழிலாளர்கள் தங்கள் பணியை முடித்துக் கொண்டு கடந்த 4-ஆம் தேதி மாலை ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தாக்குதல் நடத்த தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் கூலித் தொழிலாளர்கள் வந்த வேனை நிறுத்துமாறு பாதுகாப்புப் படையினர் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அந்த வேன் நிற்காமல் சென்ற காரணத்தினால் பாதுகாப்புப் படையினர் அதிரடியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். அந்த துப்பாக்கி சூடு மற்றும் அதையொட்டி வெடித்த வன்முறையில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் உயிரிழந்தனர். ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்திய பாதுகாப்பு படையினரால் கடந்த 4-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மக்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். நமது விருப்பத்தை அமைதியான வழியில் அடைய நாம் முயற்சிக்கிறோம். ஆனால் அவர்கள் (இந்திய ராணுவம்) நம் மீது வன்முறையை தொடர்ந்து கட்டவிழ்த்து விடுகிறார்கள். அதனால் தான் சொல்கிறோம் அப்பாவி மக்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழி வாங்கப்படும்” என அந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.