பாகிஸ்தானுடன் பேச முடிந்த மத்திய அரசால், சொந்த மக்களுடன் பேச முடியாதா என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாவோயிஸ்டுகளுக்கான இறுதி யுத்தம் தொடங்கிவிட்டது. 2026ஆம் ஆண்டில் மாவோயிஸ்டுகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய அரசு ஆப்ரேசன் ககர் என்ற பெயரில் மாவோயிஸ்டுகள் மீதான தாக்குதலை அதிகரித்தது.
இந்நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 400க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அதிக படுகொலைகள் நடந்த ஆண்டாக 2024 ஆண்டு இருக்கிறது என தெற்காசிய பயங்கரவாத போர்ட்டல் (SATP) கூறியிருக்கிறது.
ஆனால், எதிர்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் மாவோயிஸ்டுகள் என கூறி அப்பாவி பழங்குடியின மக்களை இராணுவமும் காவல்துறையும் கொன்று குவிக்கின்றன எனக் குற்றஞ்சாட்டுகின்றன. தொடர்ந்து, மாவோயிஸ்ட் அமைப்புகளில் இருந்து வெளியே வருபவர்களுக்கு உதவவும் முன் வர வேண்டும் என தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி சில மாதங்களுக்கு முன்பு மாவேயிஸ்ட் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்காமல் சமூகக் கண்ணோட்டத்தில் காண வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.
இந்நிலையில் மீண்டும் மாவோயிஸம் குறித்து பேசிய ரேவந்த் ரெட்டி, தனிநபர்களைக் கொல்வது தீர்வு அல்ல என்றும், பொதுஜன வாழ்க்கையில் இணைய விரும்பும் மாவோயிஸ்டுகளுக்கு இரக்கம் காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் கூட மத்திய அரசு உரையாடிவிடுகிறது, ஆனால் சொந்த நாட்டு மக்களான மாவோயிஸ்டுகளுடன் ஏன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாதா என வினவியுள்ளார்.
செய்தியாளர் - சீ. பிரேம்குமார்