மத்திய அரசின் கீழ் பணிபுரியும் மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயது 65ஆக அதிகரிக்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்று வழங்கியது.
இது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் கூட்டாக செய்தியாளர்களிடம் விளக்கினர். மத்திய அமைச்சரவையில் இந்தியா - பெலாரஸ் இடையே முதலீடு தொடர்பான ஒப்பந்தம் இசைவு தெரிவிக்கப்பட்டது. இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே, காவல்துறை பயிற்சியில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதுதவிர, இந்தியா - எத்தியோப்பியா இடையிலான தகவல் தொடர்பு மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசு மருத்துவர்கள் மற்றும் மத்திய சுகாதார சேவை துறையில் பணியாற்றும் மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயது 65ஆக அதிகரிக்கப்படுகிறது இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.