பஞ்சாப் மாநில நபா நகரில் தூய்மை பணியாளர்களுக்கு மக்கள் பண மாலை அணிவித்தும், பூக்களை தூவியும் நன்றி தெரிவித்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டாலும் மக்களுக்காக பலர் வெளியே உழைத்துக் கொண்டு இருக்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொது நலத்துடன் மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கடுமையான உழைப்பை கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பல்வேறு விதமாக நன்றி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் நபா நகரில் உள்ள குடியிருப்பு பகுதியிலுள்ள மக்கள் தங்கள் பகுதிக்கு தூய்மை பணி செய்ய வந்த ஊழியர்களுக்கு கரவொலிகள் எழுப்பியும், பூக்களைத் தூவியும், பண மாலை அணிவித்தும் நன்றி தெரிவித்தனர். தெருவில் தூய்மைப்பணி செய்துகொண்டு இருந்த பணியாளர்கள் மீது மாடியில் நின்றவாறு பூக்களை வீசி வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகிறனர். இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், ''தூய்மைப்பணியாளர்கள் மீது பொழியும் பாசமும் கைதட்டலும் மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் முன் நின்று போராடும் இந்த வீரர்களை நாம் ஊக்கப்படுத்துவோம்'' என தெரிவித்துள்ளார்