குடியரசு தின விழா ANI
இந்தியா

டெல்லி | குடியரசு தின விழா நிறைவு.. அணிவகுப்பில் பங்கேற்ற ’ஆபரேசன் சிந்தூர்’ வாகனங்கள்!

டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பல புதிய அம்சங்கள் இடம்பெற உள்ளன அது குறித்து பார்ப்போம்!

PT WEB

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, டெல்லி கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு 21 குண்டுகள் முழக்கத்துடன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உர்சுலா டான் டெர் லயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியா கோஸ்டா ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களை பிரதமர் மோடி வரவேற்றார். தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு நடந்தது.

ஆபரேசன் சிந்தூர் வாகனங்கள்

இந்த நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் பல புதிய அம்சங்கள் குறித்துப் பார்க்கலாம். இந்திய ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள் பைரவ் பட்டாலியன் (Bhairav battalion) முதன்முறையாக இந்த அணிவகுப்பில் பங்கேற்றிருக்கிறது. தொடர்ந்து, ரஃபேல், மிக் 29 உள்ளிட்ட 29 போர் விமானங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன. பிரமோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், தனுஷ் பீரங்கிகள் உள்ளிட்ட இந்திய முப்படைகளின் ஆயுதத்தளவாடங்களும் பங்கேற்றிருக்கின்றனர்.

மேலும், ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்த எஸ் 400, ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்புகளும் அணிவகுப்பில் கொண்டுசெல்லப்பட்டன. இரட்டைத்திமில் கொண்ட ராணுவத்தில் பணிபுரியும் பாக்டிரியன் ஒட்டகங்கள், சிறிய வகை குதிரைகள், மோப்ப நாய்களும் முதன்முறையாக அணிவகுப்பில் பங்கேற்றிருக்கின்றன. மொத்தம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வு இந்தியாவின் படைபலத்தையும் பாரம்பரிய செழுமையையும் பிரதிபலிப்பதாக இருந்தது. மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றன.