இந்தியா

"வேலைவாய்ப்பின்மை அதிகம் என்பது உண்மையில்லை" - இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார்

"வேலைவாய்ப்பின்மை அதிகம் என்பது உண்மையில்லை" - இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார்

webteam

நாட்டில் வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் அடூர் பிரகாஷ், நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டு கூடுதல் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த அரசிடம் திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கங்வார், அதிக வேலைவாய்ப்பின்மை குறித்து வெளிவரும் தகவல்கள் உண்மையில்லை என தெரிவித்தார். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுதான் அரசின் முக்கிய குறிக்கோளாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

வேலைவாய்ப்பின்மை குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறினார். வேலைவாய்ப்பின்மை குறித்து அவையில் விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கங்வார் குறிப்பிட்டார். பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மார்ச் ஒன்றாம் தேதிவரை 5லட்சத்து 86 ஆயிரத்து 728 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். 

சிறு தொழிலுக்கு கடன் வழங்கும் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 18 கோடியே 26 லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.