Elections
Elections File Image
இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா.. சட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன..?

webteam

தற்போது அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் அனைவராலும் உற்று கவனிக்கப்படுவது 'ஒரே நாடு ஒரேதேர்தல்' சாத்தியமா? என்பது மட்டுமே. ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களை நடத்த முடிந்தால் பல்வேறு செலவீனங்கள் கட்டுபடுத்தப்பட்டு அந்த தொகையை, வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கருதுகிறது.

Elections

இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான சிறப்புக்குழு சட்ட ஆணைய அதிகாரிகளையும் அரசியல் கட்சிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறது. இந்நிலையில், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு என்னென்ன சட்ட திருத்தங்கள் தேவைப்படும் என சட்ட ஆணையம் அறிக்கை ஒன்றை தயாரித்து வருகிறது.

இதனையடுத்து முதற்கட்ட நடவடிக்கையாக அறிக்கையில் இருக்கும் சட்டத் திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு அடித்தளம் அமைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையமும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான ஆலோசனைகளை மும்முரமாக நடத்தி வருகிறது. முதலாவதாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த கூடுதலாக தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு ஒரு வருட காலம் பிடிக்கும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கருதுகின்றனர். மேலும் 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு அதிகாரத்துக்கு வரும் அரசு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே 2029 ஆம் ஆண்டில் இந்த திட்டம் சாத்தியம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

election commission

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், 2024ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகாரத்துக்கு வரும் அரசு நடவடிக்கைகளை தொடங்கினால் மட்டுமே தேர்தல் ஆணையம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. எனவே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அமலுக்கு வருமா என்பது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலே முடிவு செய்யும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.