இந்தியா

ரெப்போ விகிதம் 4.4 % ஆக குறைப்பு: வீடு, வாகனக் கடன் வட்டி குறைய வாய்ப்பு

webteam

ரெப்போ விகிதம் 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை கவனித்து வருகிறோம். கொரோனா வைரஸால் ஏற்படும் பின்னடைவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம். ரெப்போ விகிதம் 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்புள்ளது. வீட்டுக்கடன் வட்டி மட்டுமின்றி தொழில்துறையினர் பெற்ற கடன்கள் மீதான வட்டியும் குறைய வாய்ப்புள்ளது.” எனத் தெரிவித்தார்.  வட்டி குறைப்பு காரணமாக மாத தவணைகளின் எண்ணிக்கையும் குறையக்கூடும் எனத் தெரிகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில் ரிசர்வ் வங்கி தரப்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.