ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ள இமெயில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பானது அல்ல என்று ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ரஃபேல் விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் அலுவலகம், தனிப்பட்ட முறையில் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியானது. அதேபோல், ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில தினங்களுக்கு முன்பாக பாதுகாப்பு கொள்முதல் விதிமுறைகள் ஊழல் தடுப்பு பிரிவுகள் நீக்கப்பட்டதாக இந்து நாளிதழ் செய்திகள் வெளியிட்டு இருந்தது.
அதேபோல், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ரஃபேல் ஒப்பந்தத்திற்கு முன்பு அனில் அம்பானி பிரான்ஸ் அரசின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சந்தித்ததாக தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பில் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் லி டிரியானின் சிறப்பு ஆலோசகர் ஜின் கிளாட் மால்லட், கிரிஸ்டோப் சாலமன் மற்றும் ஜெஃப்ரி பொக்கோட் ஆகியோர் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அத்துடன் அனில் அம்பானிக்கு பிரதமரின் பிரான்ஸ் பயணம் குறித்து முன்கூட்டியே தெரியும் எனவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
இதனையடுத்து, ரஃபேல் ஒப்பந்தம் அனில் அம்பானிக்கு முன் கூட்டியே தெரிந்தது எப்படி என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இன்று செய்தியாளர்களிடம் ராகுல் இமெயில் ஆதாரங்களையும் காண்பித்து பிரதமரை சாடினார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ள இ-மெயில் ரஃபேல் விவகாரம் தொடர்பானது அல்ல, அது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் ஏர்பஸ் ஹெலிகாப்டன் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இடையேயா புதிய ஒப்பந்தம் தொடர்பானது என்று ரிலையன்ஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அதேபோல், இந்தியா-பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான ரஃபேல் ஒப்பந்தத்திற்கு அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.