இந்தியா

ஆந்திரா : சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை 10 கி.மீ டோலியில் சுமந்த உறவினர்கள்

EllusamyKarthik

ஆந்திராவில் சாலை வசதி இல்லாததால் நிறை மாத கர்ப்பிணிப் பெண்ணை அவரது உறவினர்கள் சுமார் 10 கிலோ மீட்டருக்கு ‘டோலி’ கட்டி சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள தெலகவலசா என்ற கிராமத்தில் இந்த அவலம் அரங்கேறி உள்ளது. 

இன்றைய நவீன உலகில் மனித வாழ்க்கையே பாஸ்ட் பார்வேர்ட் மோடில் ஓடிக் கொண்டிருக்க சாலை வசதி இல்லாததால் நிறை மாத கர்ப்பிணி பெண்ணின் சிகிச்சைக்காக உறவினர்கள் அவரை டோலியில் சுமந்து செல்வது மிகுந்த வேதனையான சம்பவமாகும். 

பல ஆண்டுகளாக இந்த பகுதியை சார்ந்த மலை கிராம மக்கள் நோய்வாய்ப்பட்ட மக்களையும், அவசர மற்றும் பேரு கால சிகிச்சைக்காகவும் டோலியில் சுமந்து செல்லும் வழக்கம் தொடர்கதையாகி வருகிறது. மலை பாதையின் நடைவழி பாதையில் டோலி மூலம் சுமந்து கொண்டு வரும் உறவினர்கள் முறையான தார் சாலையை வந்தடைந்ததும், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகின்றனர்.  

மலைகிராமமான தெலகவலசாவிற்கு வாகனப் போக்குவரத்து மேற்கொள்ள முறையான சாலை வசதி இல்லை என தெரிகிறது. இந்நிலையில் பேற்று வழி ஏற்பட்ட கர்ப்பிணியை, கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும், உறவினர்களும் டோலி கட்டி சுமார் 10 கிலோ மீட்டர் தோளில் சுமந்து சென்றனர்.

தங்கள் பகுதிக்கு முறையான சாலை வசதி வேண்டுமெனவும், அது கிடைத்தால் மருத்துவ அவசர தேவை உள்ள நபர்களை தகுந்த நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க முடியும் எனவும் கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.