36 மாநிலக் கட்சிகளின் தணிக்கை அறிக்கைகளை ஆய்வு செய்த சங்கம், திமுக, சிவசேனா உள்ளிட்ட 31 முக்கிய கட்சிகள் காலக்கெடு முடிந்தும் தேர்தல் ஆணையத்தில் தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் 36 மாநிலக் கட்சிகளின் தணிக்கை அறிக்கைகளை ஆய்வு செய்து புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தக் கட்சிகளின் மொத்த வருமானம் ஆயிரத்து192 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 51 சதவீதம் குறைவாகும். வருமானம் குறைந்தாலும், கட்சிகளின் ஒட்டுமொத்த செலவு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசியல் கட்சிகளின் வருமானத்தில் தெலுங்கு தேசம் 228 கோடிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆனால், செலவினத்தில் ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் 340 கோடி ரூபாய் செலவிட்டு முதலிடத்தில் உள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 36 கட்சிகளில், 21 கட்சிகள், ஈட்டிய வருமானத்தை விட அதிகமாகச் செலவு செய்துள்ளன.
திமுக, சிவசேனா உள்ளிட்ட 31 முக்கிய மாநிலக் கட்சிகள் கடந்த அக்டோபர் மாத காலக்கெடு முடிந்தும், இதுவரை தணிக்கை அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவில்லை என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கட்சிகளின் நிதி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை தேவை என்றும், விதிகளை மீறும் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.